Monday, 16 November 2015

ஏக்கக்  காட்சி
பாவலர்  கருமலைத்தமிழாழன்

அரைக்கால்    சட்டையுடன்
            அடுத்தவீட்டுச்    சிறுவருடன்
உரையாடி   நடந்துபள்ளி
            உளம்மகிழ    சென்றநாள்கள் !

பள்ளிநுழை   வாயில்முன்
            படர்ந்தமர    நிழலின்கீழ்
நெல்லிக்காய்    கூறுகட்டி
            நிலம்மீது    அமர்ந்தபடி !

வறுத்தநிலக்    கடலையொடு
            வறுக்காத   நாவற்பழம்
சுருக்குப்பை   பாட்டிவிற்க
            சுவையாக    உண்டநாள்கள் !

மிட்டாயில்    கடிகாரம்
            மிடுக்காகக்    கையில்கட்டி
கெட்டியான     கமர்கட்டைக்
            கேட்காத   நண்பனுக்கும் !

காக்காகடி    கடித்தளித்துக்
            கரம்கோர்த்து    நின்றதெல்லாம்
ஏக்கத்தை    நெஞ்சிற்குள்
            ஏற்றியது;  பேருந்தில் !

பூட்டிவிட்ட    சீருடையில்
            புத்தகங்கள்    பொதிசுமந்து
போட்டடைத்த    பொட்டலமாய்ப்
            பேரன்தான்    சென்றகாட்சி !

Monday, 9 November 2015

கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா
தமிழ்நாடு  அரசின்  தமிழ்  இணையக் கல்விக் கழகமும்,  புதுக்கோட்டை  கணினித் தமிழ்ச்சங்கமும்  இணைந்து  நடத்திய  உலகத் தமிழ்  வலைப்பதிவர்  திருவிழாவை  முன்னிட்டு உலக அளவில் இணையதளம்  வாயிலாக அறிவித்த  கட்டுரை, புதுக்கவிதை,  மரபுக்கவிதைப்  போட்டிகளில்  மரபுக்கவிதைப் போட்டியில்  பரிசு  பெற்ற 
பாவலர்  கருமலைத்தமிழாழன்  அவர்களுக்கு  11 – 10 – 2015  அன்று  புதுக்கோட்டையில்   அழகப்பா  பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா  அவர்கள்  தலைமையிலும், இந்தியா  விக்கி மீடியா  திட்ட  இயக்குநர் திரு.அ.இரவிசங்கர்  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற  விழாவில்  தமிழ்  இணையக்  கல்விக்கழக  உதவி இயக்குநர் முனைவர் மா. தமிழ்ப்பரிதி  அவர்கள்  விருதும், பரிசுத்தொகையும்  வழங்கினார்.

                                                     (  பரிசு  பெற்ற  கவிதை )

கனவுகளும்   நனவாகும்
பாவலர் கருமலைத்தமிழாழன்

விசிறியினை    அசைக்காமல்   காற்று   வாரா
            வியர்வையினைச்   சிந்தாமல்    உயர்வு    வாரா
நசிந்தநிலை    மாறுதற்குக்    கடின    மாக
            நாமுழைக்க    முனையாமல்    வறுமை    போகா
பசிக்கின்ற   வயிற்றைப்போல்    இடைவி    டாமல்
            படும்முயற்சி    செய்யாமல்    வெற்றி    சேரா
வசியமாகும்    எல்லாமும்    தன்னம்    பிக்கை
            வளர்த்துநாமும்    துணிவோடு    செயல்கள்    செய்தால் !

எதையும்நாம்    சாதிக்க    முடியும்  என்ற
            எண்ணத்தை    நெஞ்சத்தில்    நிறைத்துக்    கொண்டால்
புதைகுழியின்    சேற்றுக்குள்    விதைத்தால்    கூடப்
            பூத்துவரும்    தாமரைபோல்    எழுவோம்    மேலே
கதைகளிலே    வருவதைப்போல்    நாளும்    நாமும்
            கனவுகளில்    காண்கின்ற    இன்ப    வாழ்வை
உதைபந்து    போலெழுந்தே    சோர்ந்தி   டாமல்
            உழைக்கின்ற   போதெல்லாம்    நனவாய்க்   காண்போம் !

எதுதேவை   எனமனத்தில்   முடிவு   செய்தே
            ஏற்றவழி   அறிவாலே   வகுத்துக்    கொண்டு
மெதுவாகக்    கரங்களிலே    நாமு   ழைத்தால்
            மேன்மையான    வெற்றிவந்து   காலில்    வீழும்
செதுக்குகின்ற    உளியாலே    சிதறும்    கல்லாய்
            செயல்களிலே    தன்னலத்தை   உதறி   விட்டுப்
பொதுநலத்தில்   சமூகத்தை    உயர்த்த    வந்தால்
            பொலிகின்ற   சிற்பம்போல்   புகழும்   சேரும் !




வெடியில்லாத்  தீபாவளி
பாவலர்  கருமலைத்தமிழாழன்

வெடிப்பதனால்   பெறுவதென்ன !   வெடிக்கும்   சத்தம்
            வேட்டுவைத்துக்   காதுகளைச்   செவிடாய்   ஆக்கும்
வெடிகளினால்    பணமெல்லாம்    கரியாய்த்   தீய்த்து
            வெற்றார   வாரத்தால்   பலன்தான்   உண்டோ
வெடிகளினைச்    செய்கின்ற    சிறுவ   ரெல்லாம்
            வேகின்றார்   கந்தகத்தில்   கல்வி   தொலைத்தே
வெடிகளினைச்    செயும்போதும்   வெடிக்கும்   போதும்
            வேதனைதான்   உயிர்பலியால்    வேறென்   கண்டோம் !

வெடிகளினை    வாங்குகின்ற    பணத்தைக்    கொண்டு
            வேறுநல்ல   பணிகளினைச்    செய்ய   லாமே
படிப்பதற்கு    வசதியற்ற    ஏழை   யர்க்கும்
            பசியாலே    துடிக்கின்ற    ஏழை   யர்க்கும்
உடுப்பதற்குத்    துணியில்லா   ஏழை   யர்க்கும்
            உறவில்லா   அனாதையான   குழந்தை   கட்கும்
முடிந்தளவு    அப்பணத்தைக்    கொடுக்க   லாமே
            முன்னேற    அவர்களுக்கு    உதவ    லாமே !

வீட்டினிலே   தீபமேற்றி   விரிந்த   நெஞ்சால்
            வீதியெல்லாம்    மதம்மறந்து    கைகள்   கோர்ப்போம்
ஏட்டினிலே   இருக்கின்ற    மனித   நேயம்
            ஏந்திகையில்   சாதிவிட்டே   அணைப்போம்  ஒன்றாய்
வேட்டுவைப்போம்    மனத்தினிலே   தீமை   கட்கு
            வேதனையில்   பங்குகொண்டு   மகிழ்வோம்   சேர்ந்து
கூட்டாகத்   தீபாவளித்    திருநாள்   தன்னைக்
            குதுகலமாய்    கொண்டாடி    இன்பம்   துய்ப்போம் !