கருகும் பிஞ்சுகள்

Showing posts with label கருகும் பிஞ்சுகள்-பாவலர் கருமலைத்தமிழாழன். Show all posts
Showing posts with label கருகும் பிஞ்சுகள்-பாவலர் கருமலைத்தமிழாழன். Show all posts

Friday, 23 October 2015

கருகும் பிஞ்சுகள்


கருகும்  பிஞ்சுகள்
பாவலர்  கருமலைத்தமிழாழன்

பகர்கின்ற    கட்டாயக்    கல்விச்    சட்டம்
            பறைசாற்றும்    குழந்தைதொழி    லாளர்    சட்டம்
முகம்காட்டும்    கண்ணாடி    போல   யிங்கே
            முன்னிருந்தும்    கண்மறைக்கும்    வறுமை    யாலே
அகரத்தை    எழுதுதற்கே    கனவு    கண்டு
            அன்புத்தாய்    நீவிவிட்ட     அரும்வி   ரல்கள்
தகதகக்கும்    கந்தகத்து    மருந்தில்    தோய்ந்து
            தயாரித்துத்    தருகிறது     நெருப்புக்    குச்சி !

சீருடையில்    அழகொளிரச்   சிரிப்பு     திர்த்துச்
            சிற்றுந்தில்    அமர்ந்தபடி     கைய    சைத்துப்
பேருவகை     தருமென்று    கனவு    கண்டு
            பெருமன்பில்    நீவிவிட்ட    பிஞ்சு    விரல்கள்
சீருடையில்    தொழிற்சாலை    பெயர்வி    ளங்க
            சீறிவரும்   வெடிமருந்து    வாசம்   வீசும்
பேருந்தில்   செல்கிறது    வறுமை    என்னும்
            பெயரழிக்கத்   தீக்குச்சி     அடுக்கு   தற்கே !

பூப்போன்ற    மென்விரல்கள்    புத்த    கத்தைப்
            புரட்டிக்கண்    வியந்திடவே    பார்த்துப்    பார்த்து
நாப்புரள     பேசுதற்கு    முயற்சி    செய்து
            நல்லறிவு    பெறவாய்த்த    இளமை    தன்னில்
தீப்பற்றும்    வெடிமருந்து   கிடங்கிற்    குள்ளே
            திரியாக    வறுமையிலே    கருகுவ    தெல்லாம்
காப்பாற்றத்    திட்டங்கள்   வகுத்தி    டாமல்
            கள்ளராக    ஆட்சிசெய்யும்    கயவ   ராலே !