Friday 4 December 2015

மாசுநீக்கி மாண்புறுவோம்



மாசுநீக்கி   மாண்புறுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

அகமாசோ    அனைத்துவகை    தீமை    கட்கும்
            அடித்தளமாய்   அமைகின்ற    கொடிய   மாசு
முகம்பார்த்து   அறிவதற்கும்    முடிந்தி   டாது
            முயன்றாலும்    எளிதாகத்   தெரிந்தி    டாது
நகம்போல    வெட்டியதை    எறியா    விட்டால்
            நாகம்போல்    கொத்திவிடும்   நஞ்சைக்    கக்கி
தகவாழ்வு    நாம்பெறவே    எண்ணத்    தூய்மை
            தாயன்பு     இரக்கமனம்    அமைய    வேண்டும் !

புறமாசோ    அனைத்துவகை    நோய்க    ளுக்கும்
            புதுவலிமை    ஊட்டுகின்ற    புன்மை    மாசு
நிறம்கண்ணில்     தெரிவதைப்போல்   தெரிந்தே   நாளும்
            நீரினையும்    காற்றினையும்    கெடுக்கின்   றோம்நாம்
இறப்பளிக்கும்    மதுகுடித்தல்    போல    கூற்றை
            இயற்கையினை    மாசாக்கி    அழைக்கின்   றோம்நாம்
அறம்நம்மைக்    காத்தல்போல்    சுற்றுச்    சூழல்
            அருந்தூய்மை    காக்கினது    நம்மைக்   காக்கும் !

அழுக்காறு    சினம்ஆசை    சூழ்ச்சித்    தீயை
            அகமாசு    பெருக்கிநம்மை    எரித்த    ழிக்கும்
வழுக்கவைத்துப்   புகழ்கெடுத்தே   உலக   மெல்லாம்
            வசைபாடப்    புறக்கணித்தே    இழிவு   செய்யும்
உழுதிடும்மண்    வீசுகாற்று    குடிக்கும்    தண்ணீர்
            உயிர்பறிக்கும்    நஞ்சாக்கும்    புறத்தின்    மாசு
விழுதுவிடும்    ஆலம்போல்    தழைத்து    வாழ
            விளைவிப்போம்    அகம்புறத்தில்    தூய்மை   தன்னை !

Monday 16 November 2015

ஏக்கக்  காட்சி
பாவலர்  கருமலைத்தமிழாழன்

அரைக்கால்    சட்டையுடன்
            அடுத்தவீட்டுச்    சிறுவருடன்
உரையாடி   நடந்துபள்ளி
            உளம்மகிழ    சென்றநாள்கள் !

பள்ளிநுழை   வாயில்முன்
            படர்ந்தமர    நிழலின்கீழ்
நெல்லிக்காய்    கூறுகட்டி
            நிலம்மீது    அமர்ந்தபடி !

வறுத்தநிலக்    கடலையொடு
            வறுக்காத   நாவற்பழம்
சுருக்குப்பை   பாட்டிவிற்க
            சுவையாக    உண்டநாள்கள் !

மிட்டாயில்    கடிகாரம்
            மிடுக்காகக்    கையில்கட்டி
கெட்டியான     கமர்கட்டைக்
            கேட்காத   நண்பனுக்கும் !

காக்காகடி    கடித்தளித்துக்
            கரம்கோர்த்து    நின்றதெல்லாம்
ஏக்கத்தை    நெஞ்சிற்குள்
            ஏற்றியது;  பேருந்தில் !

பூட்டிவிட்ட    சீருடையில்
            புத்தகங்கள்    பொதிசுமந்து
போட்டடைத்த    பொட்டலமாய்ப்
            பேரன்தான்    சென்றகாட்சி !

Monday 9 November 2015

கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா
தமிழ்நாடு  அரசின்  தமிழ்  இணையக் கல்விக் கழகமும்,  புதுக்கோட்டை  கணினித் தமிழ்ச்சங்கமும்  இணைந்து  நடத்திய  உலகத் தமிழ்  வலைப்பதிவர்  திருவிழாவை  முன்னிட்டு உலக அளவில் இணையதளம்  வாயிலாக அறிவித்த  கட்டுரை, புதுக்கவிதை,  மரபுக்கவிதைப்  போட்டிகளில்  மரபுக்கவிதைப் போட்டியில்  பரிசு  பெற்ற 
பாவலர்  கருமலைத்தமிழாழன்  அவர்களுக்கு  11 – 10 – 2015  அன்று  புதுக்கோட்டையில்   அழகப்பா  பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா  அவர்கள்  தலைமையிலும், இந்தியா  விக்கி மீடியா  திட்ட  இயக்குநர் திரு.அ.இரவிசங்கர்  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்ற  விழாவில்  தமிழ்  இணையக்  கல்விக்கழக  உதவி இயக்குநர் முனைவர் மா. தமிழ்ப்பரிதி  அவர்கள்  விருதும், பரிசுத்தொகையும்  வழங்கினார்.

                                                     (  பரிசு  பெற்ற  கவிதை )

கனவுகளும்   நனவாகும்
பாவலர் கருமலைத்தமிழாழன்

விசிறியினை    அசைக்காமல்   காற்று   வாரா
            வியர்வையினைச்   சிந்தாமல்    உயர்வு    வாரா
நசிந்தநிலை    மாறுதற்குக்    கடின    மாக
            நாமுழைக்க    முனையாமல்    வறுமை    போகா
பசிக்கின்ற   வயிற்றைப்போல்    இடைவி    டாமல்
            படும்முயற்சி    செய்யாமல்    வெற்றி    சேரா
வசியமாகும்    எல்லாமும்    தன்னம்    பிக்கை
            வளர்த்துநாமும்    துணிவோடு    செயல்கள்    செய்தால் !

எதையும்நாம்    சாதிக்க    முடியும்  என்ற
            எண்ணத்தை    நெஞ்சத்தில்    நிறைத்துக்    கொண்டால்
புதைகுழியின்    சேற்றுக்குள்    விதைத்தால்    கூடப்
            பூத்துவரும்    தாமரைபோல்    எழுவோம்    மேலே
கதைகளிலே    வருவதைப்போல்    நாளும்    நாமும்
            கனவுகளில்    காண்கின்ற    இன்ப    வாழ்வை
உதைபந்து    போலெழுந்தே    சோர்ந்தி   டாமல்
            உழைக்கின்ற   போதெல்லாம்    நனவாய்க்   காண்போம் !

எதுதேவை   எனமனத்தில்   முடிவு   செய்தே
            ஏற்றவழி   அறிவாலே   வகுத்துக்    கொண்டு
மெதுவாகக்    கரங்களிலே    நாமு   ழைத்தால்
            மேன்மையான    வெற்றிவந்து   காலில்    வீழும்
செதுக்குகின்ற    உளியாலே    சிதறும்    கல்லாய்
            செயல்களிலே    தன்னலத்தை   உதறி   விட்டுப்
பொதுநலத்தில்   சமூகத்தை    உயர்த்த    வந்தால்
            பொலிகின்ற   சிற்பம்போல்   புகழும்   சேரும் !